ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள் தொடங்கத் தயாராக உள்ளன.

கிரீன்வேஸ் சாலை மற்றும் துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில், அதிநவீன சிறப்பு மருத்துவமனையை (super-speciality hospital) அமைப்பதற்காக, நீண்ட கால குத்தகை அடிப்படையில் நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தை (leave and license agreement), ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ‘கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட்’ (KIMS) நிறுவனம் ஆந்திர மகிளா சபாவுடன் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலப்பகுதி 1.168 ஏக்கர் (அதாவது 21.19 கிரவுண்ட்) பரப்பளவு கொண்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாட்டின் சுகாதாரச் சேவைத் துறையில் KIMS நிறுவனம் முதன்முறையாக அடியெடுத்து வைக்கிறது. இந்நிறுவனம் 300 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதுடன், இதற்கான முதலீடு ரூ.300 கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மகிளா சபாவின் (AMS) சில பழைய கட்டிடங்கள் மற்றும் ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு ஹோட்டல் ஆகியவை இடிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள கட்டிடங்களில் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையின் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று ஆந்திர மகிளா சபா வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தாய் சேய் நலச் சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

Verified by ExactMetrics