மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்பு பொட்டலங்கள் மற்றும் புத்தகங்களை பார்சல் அனுப்பி வருகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களாக, அமெரிக்காவிற்கான முன்பதிவுகள் அதிகமாக இருந்ததாக தபால் துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவிற்குள் இருக்கும் இடங்களுக்கான பார்சல் சேவைகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு முன்பதிவு கவுண்டர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் (ஞாயிற்றுக்கிழமை விடுமுறை).
நீங்கள் அனுப்ப உள்ள இனிப்பு வகைகளை பேக் செய்யும்படி தபால்துறை ஊழியரிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் வீட்டிற்கு வந்து பார்சல்களை எடுத்துச் செல்ல தபால் ஊழியரை அழைக்கலாம் தொலைபேசி எண் : 94548 42115. இந்த சேவைகளுக்கு தனியே சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்னணி கடைகளும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில், நவராத்திரி கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான முன்பதிவுகளை தபால் துறை சிறப்பாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.