மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு தலைவராக பதவியேற்கவுள்ளார். இவருக்கு வயது 55. போப் ஆண்டவர் இவரை சமீபத்தில் அந்தமான் தீவின் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார். பதவியேற்பு விழா ஆகஸ்ட் 21ம் தேதி அந்தமான் தீவின் தலைநகர் போர்ட்பிளேயரில் நடக்க உள்ளது. பாதிரியார் விசுவாசம் செல்வராஜ் அவர்கள் ஆந்திர மகிள சபாவின் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் பிறந்தார். பாதிரியாரின் குடும்பம் கிரீன் வேஸ் சாலையில் வசித்து வந்தனர். இவரது குடும்பத்தினர் அவல் வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வந்தனர். தற்போதுகூட பாதிரியாரின் சகோதரர் பாஸ்கர் மந்தைவெளியில் தேவநாதன் தெருவில் அவல் மற்றும் அதனுடன் சேர்ந்து வேரு சில பொருட்களையும் மொத்தவியாபாரம் செய்து வருகிறார்.
பாதிரியார் செல்வராஜ் தனது பள்ளிப்படிப்பை ராஜா முத்தையா பள்ளியிலும் பின்னர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியிலும் பின்னர் பாதிரியார் படிப்பில் சேர்ந்து படித்ததாக தெரிவிக்கிறார். மேலும் பாதிரியார் படிப்பை முடிக்கும்போது அந்தமான் பகுதிக்கு பாதிரியார் தேவை இருப்பதாகவும் தெரிவித்தனர் அப்போது அவர் அந்தமானுக்கு சென்று சேவை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அன்று முதல் பாதிரியார் செல்வராஜ் பல்வேறு பதவிகளில் இருந்துவந்துள்ளார். பிஷப் குழுவிலும் பணியாற்றி வந்துள்ளார். ஆகவே தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.