மெரினா கடற்கரையோரம் உள்ள குப்பமான முல்லை மாநகரில் மும்பையை தலைநகரமாக கொண்டு இயங்கும் டிக்னிட்டி பவுண்டேஷன், இந்த பகுதியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு சில உதவிகளை செய்து வருகிறது. டிக்னிட்டி பவுண்டேஷனுக்கு சென்னையிலும் அலுவலகம் உள்ளது. கடந்த மே மாதம் முதல் இந்த குப்பத்தில் வசித்து வரும் சுமார் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு இவர்களின் பவுண்டேஷன் சார்பாக புத்துணர்வு ஊட்டும் விதமாக முதியோருக்கான விளையாட்டுகள், கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் இன்னும் சில விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர். ஏனென்றால் கடந்த வருடத்திலிருந்து கொரோனா காரணமாக இவர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர். சிலர் மன இருக்கத்திற்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு இந்த புத்துணர்வு அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக டிக்னிட்டி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை நடத்த முல்லை மாநகர் மக்கள் அங்கிருக்கும் சமுதாய கூடத்தில் நடத்த இடம் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இங்கு வரும் முதியவர்களுக்கு மதிய உணவு மற்றும் தேநீர் இலவசமாக வழங்குகின்றனர். தற்போது டிக்னிட்டி பவுண்டேஷனுக்கு நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் உள்ள மேற்கூரை பழுதடைந்து உள்ளதாகவும், அதே நேரத்தில் இங்கு கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை என்றும் ஆகவே இவற்றை சரி செய்ய உதவியை எதிர்பார்க்கின்றனர். மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த முதியோர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதியோர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதே டிக்னிட்டி பவுண்டேஷனின் வேலையாகும்.