முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், TNCA அதிகாரியுமான R. சந்திரசேகரன் காலமானார்.

தமிழ்நாடு மாநில முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் TNCA அதிகாரியுமான R. சந்திரசேகரன் ஜூலை 11 அன்று காலமானார். இவருக்கு வயது 86.

சமீபத்தில், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு, மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட சாலையில் உள்ள தனது குடியிருப்பை (அருண் பிளாட்ஸில்) அன்பளிப்பாக அளித்து, பின்னர், மற்றொரு சொத்தை புற்றுநோய் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் படித்து ஜூனியர் லெவல் கிரிக்கெட்டில் முத்திரை பதித்தார், பின்னர் அவர் சிறந்த வேகமான ஆஃப் ஸ்பின்னராக அறியப்பட்டார்.

இவர் இரண்டு தசாப்தங்களாக ஸ்டேட் வங்கிக்காக முதல் டிவிஷன் கிரிக்கெட்டில் விளையாடினார், மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய உயர்நிலை அகில இந்திய ஸ்டேட் வங்கி அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1963 – 64 இல், உள்ளூர் கிரிக்கெட் சீசனில் SBIக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார். 1996ல் வங்கியின் ஏஜிஎம் ஆக இருந்து ஓய்வு பெற்றார்.

2021 இன் பிற்பகுதியில் ரஞ்சி கிரிக்கெட் வீரரான இவரது மகன் வசந்தை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்ற அன்று இரவு வெறும் 45 வயதில் இழந்தார். சந்திரசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார்.

பின்னர் சந்திரசேகரன் தனது குடியிருப்பின் ஆவணங்களின் நகல்களை மடத்திற்கு ஆதரவாக பதிவு செய்வதற்காக ஒப்படைத்தார். அவரது சகோதரர் ஆர். மோகன், முன்னாள் தமிழக மாநில கால்பந்து வீரர், மடத்திடம் ஆவணங்களை ஒப்படைக்கும் போது அவருடன் இருந்தார். ஒப்பந்தத்தின்படி, அவர் இறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு மடம் அவரது குடியிருப்பை எடுத்துக் கொள்ளலாம்.

சந்திரசேகரன் தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டில் பன்முக ஆளுமையாக இருந்துள்ளார்.

இவர் முதல் தர மட்டைப்பந்து வீரர், நடுவர், போட்டி நடுவர், TNCA இன் பொருளாளர், ஸ்கோரர், தேர்வாளர், மாநில அணியின் மேலாளர், பல TNCA லீக் அணிகளின் உரிமையாளராக, TNCA இன் குழு உறுப்பினர் மற்றும் வெளிநாடுகளில் அணிகளை எடுத்த குளோப் டிராட்டர். என்று பலமுக திறமைகளை கொண்டவர்.

பி.எஸ். பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார்.

கடந்த வாரம், மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.

செய்தி : எஸ். பிரபு

Verified by ExactMetrics