மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.
இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இதை பற்றி அறிந்தவர்களால் தெளிவாகக் குறிப்பிடமுடியவில்லை.
இதுகுறித்து திங்கள்கிழமை நேரில் பார்வையிட்ட மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, கார்த்திகை தீபத்திற்காக குளத்தின் படியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விளக்குகளில் ஊற்றப்பட்ட எண்ணெய், மழை பெய்தவுடன் தண்ணீரில் கலந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் மழை பெய்ய துவங்குவதற்கு முன்னரே மாலை 5 மணி முதல் குளத்தின் தென்மேற்கு மூலையில் மீன்கள் செத்து மிதந்து காணப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர். எம்எல்ஏவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்தை கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் மழைநீர் வடிகால்களில் இருந்து குளத்திற்குள் பாய்ந்த தண்ணீர் அழுக்காகவும், துர்நாற்றம் வீசுவதாக இருந்ததாகவும், இதனால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சிலர், மழைநீர் குளத்திற்கு சீராக வருவதால் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு மாறுவதும் மீன்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.