மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மின் மயானம் இராணி மேரி கல்லூரியின் எதிரில் மற்றும் டி.ஜி.பி அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக கோவையிலுள்ள ஈஷா பவுண்டஷன் இந்த மாயனத்தை நிர்வகித்து வந்தது. இங்கு எரிவாயு மூலமாக உடல்கள் எரிக்கப்படுவதாகவும் அதே நேரத்தில் ஒரு உடலை எரிக்க சுமார் இரண்டு மணி நேரம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா காரணமாக ஒரு நாளில் எரிக்கப்படும் உடல்களை விட அளவுக்கு அதிகமாக உடல்களை எரித்ததால் இந்த எரியூட்டும் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கொரோனா காரணமாக உடல்கள் நிறைய எரிக்கப்படவேண்டியுள்ளதால் இதன் தேவை அதிகரித்து உள்ளது. இந்த தேவையை கருத்தில் கொண்டு புதிய எரியூட்டும் இயந்திரம் வாங்க ஈஷா பவுண்டேஷனுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதியதாக இயந்திரம் வாங்கி இங்கு நிறுவுவதற்கு சுமார் நான்கு வார காலங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மயானத்தில் உடல்களை புதைப்பதற்கு தேவையான இடமும் பணியாட்களும் உள்ளனர்.