டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி கலந்து கொண்டு புதிய இயக்குனராக பதவியேற்கவுள்ள சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவரிடம் அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜே.கே திரிபாதியின் மனைவியும் கலந்துகொண்டார். பதவியேற்பிற்கு பின் ஓய்வு பெற்ற தலைமை இயக்குனர் திரிபாதியையும் அவருடைய மனைவியையும் அலங்கரிக்கப்பட்ட காரில் அமரவைத்து காவல்துறை தலைமை அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். இது ஒரு வழக்கமான நிகழ்வு.
கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அலுவலகம். கடந்த இருபது வருடங்களுக்கு முன் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடங்களை இடிக்கக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததால் இந்த கட்டிடத்தை இடிக்காமல் அரசு தற்போதுவரை பயன்படுத்தி வருகிறது.