மந்தைவெளியில் உள்ள இந்த சென்னை உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்ய உங்கள் ஆதரவு தேவை

மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து விசாலாட்சி தோட்டம், வண்ணியம்பதி, ஜெத் நகர் போன்ற பகுதிகளில் நடைபயணமாக சென்று, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த மாநகராட்சி பள்ளி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 105 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை வருடாவருடம் குறைந்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணங்களாக குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசித்து வந்த மக்களை வேறொரு பகுதிக்கு அரசு இடமாற்றம் செய்ததாலும் மற்றும் பழைய குடியிருப்பு பகுதிகளை இடித்து புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதால் இங்கு வசித்து வந்த குடும்பங்கள் வேறொரு பகுதிகளில் வசித்து வருவதால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக பள்ளியின் முதல்வர் பால்ராஜ் தெரிவிக்கிறார். இந்த பள்ளியில் ஆங்கிலவழி கல்வியும் தமிழ்வழி கல்வியும் உள்ளது. இப்பள்ளியில் ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களுக்கு பள்ளியின் முதல்வர் பால்ராஜை 7402133337 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.