சென்னை கார்ப்பரேஷன் இன்று நகரில் மூன்று மையங்களில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற ஒத்திகையை நடத்தினர். இந்த மூன்று மையங்களில் ஒன்றான மயிலாப்பூர் சாந்தோம் அப்பு முதலி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்தவுடன் யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறதோ அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் ஐந்து படிகளை கடைபிடிக்க வேண்டும். இந்த படிகளை இன்று சுகாதார ஊழியர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
தடுப்பூசி வந்தவுடன் முதலில் செவிலியர்கள், மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிராக பணியாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களுடைய விவரங்கள் ஏற்கனெவே சுகாதார மையங்களில் உள்ளது. அவ்வாறுள்ள முதல் இருபத்தைந்து பேருக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். தடுப்பூசி வந்தவுடன் தினமும் வழங்கப்படாது என்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்றும் சுகாதார ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.