ஆழ்வார்பேட்டையிலுள்ள இந்த பள்ளிக்கு உடனடியாக வகுப்பறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் இது போன்ற மாநகராட்சி பள்ளிகள் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதை கையாள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

ஆழ்வார்பேட்டை மண்டலத்திலுள்ள பீமன்னபேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் ஒரே வளாகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவு இல்லை. அப்படியே இருந்தாலும் பயன்படுத்த ஏற்றதாக இல்லை.

மாணவர்களுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை பாட்டிலில் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துவர அறிவுறுத்துகின்றனர்.

மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களில் மதிய உணவருந்த போதுமான இடவசதி செய்து தரப்படவில்லை. எனவே மாணவர்கள் வகுப்பறையிலேயே மதிய உணவருந்துகின்றனர்.

மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் சமையல் கூடமும் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் சமைப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.

இந்த பள்ளியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு பார்வையிட்டு போதுமான உதவிகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் இது போன்ற தனியார் தொண்டுநிறுவனங்களிடமிருந்தும் உதவியை எதிர்பார்ப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics