பருவமழை காலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் பற்றி புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதையடுத்து மயிலாப்பூரிலும் அவ்வப்பொழுது மழை பொழிந்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது தவிர சாலைகளில் சாய்ந்து வளர்ந்துள்ள மரங்கள் அவ்வப்போது சாலைகளில் விழுவதால் இது போன்ற மரங்களை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதாரணமாக செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வி.சி கார்டன் சந்திப்பில் சாலை பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதேபோன்று நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள லஸ் அவென்யூ தெருவில் மெட்ரோ வாட்டர் பணிக்கு குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டது ஆனால் பக்கவாட்டில் உள்ள மண் சரிவர மூடப்படவில்லை. இதன் காரணமாக சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

ஆர்.கே மட சாலை இராணி மெய்யம்மை பள்ளி அருகே  உள்ள சாலையில் மழை பொழிந்தால் தண்ணீர் தேங்கும் விதம் உள்ளது. தெற்கு கால்வாய் சாலை அல்போன்சா விளையாட்டு மைதானம் எதிரே மழை அதிகமாக பொழிந்தால் சாலையில் தண்ணீர் அதிகம் தேங்குவதாகவும் இதை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் பகுதிகளில் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தாலோ அல்லது சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் 1913 என்று எண்ணுக்கு அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Verified by ExactMetrics