இன்று கோவில்களுக்கு சென்ற மக்கள் மூடிய வாயில்களுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், லஸ் நவசக்தி விநாயகர் கோவில், ஆர்.ஏ.புரம் சித்திபுத்தி விநாயகர் கோவில் போன்ற கோவில்களில் மக்கள் கோவிலுக்கு வெளியே தங்களுடைய வேண்டுதல்களை செய்தனர். மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கோவிலுக்குள் நடைபெற்றது. கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை எட்டு மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலில் தனியார் ஒருவரின் திருமணம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் வேளையில் கோவிலுக்குள் திருமணத்திற்கு சென்ற மக்களை எவ்வாறு அனுமதித்தனர் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.