ஆர். கே நகரில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீதிகளை அழகுபடுத்தும் பணிகளை சிறப்பாக செய்துவருகின்றனர்.

ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அவர்களுடைய தெருவில் மரங்களை நட்டும், சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்தும், இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டும் தெருவில் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

இது தவிர வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரித்து உள்ளூர் பூங்கா அருகே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் சேகரிக்கின்றனர். இதை ஏஜென்ட் ஒருவர் எடுத்துச்செல்கிறார். இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை உர்பேசர் ஊழியர்களிடம் நேரடியாக கொடுக்கின்றனர். ஆகவே இந்த தெருக்களில் குப்பைகளை பார்க்கமுடியாது. இப்போது இந்த ராமகிருஷ்ணா நகரில் பத்து தெருக்களில் வசிக்கும் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதல் மற்றும் இரண்டாவது தெருவிலும் மக்கள் தெருக்களில் மரம் நடுதல் மற்றும் இதர அழகுபடுத்தும் வேலைகளை செய்கின்றனர். இது மற்ற பகுதி மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.